PCR சந்தேகம்; நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

PCR பரிசோதனையில் சந்தேகம்; மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு 

by Staff Writer 15-02-2021 | 10:16 PM
Colombo (News 1st) திடீரென உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தின் கீழ் கடமையாற்றிய 26 வயதான இளைஞரின் இறுதிக் கிரியைகளை நாளை மறுதினம் (17) வரை இடைநிறுத்துமாறு தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் அதன் சட்ட வைத்திய அதிகாரிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது. மிகவும் திடகாத்திரமாக இருந்த தமது மகன் திடீரென உயிரிழந்த பின்னர் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அந்த அறிக்கை குறித்து தமக்கு சந்தேகம் எழுவதாகவும் இதனால் மீண்டும் PCR பரிசோதனை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது. திருகோணமலையை சேர்ந்த ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ரீட் மனுவை பரிசீலனைக்கு எடுத்துகொண்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி அர்ஜூன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர். இந்த மரணம் தொடர்பான விடயங்களை சமர்ப்பிப்பதற்காக நாளை மறுதினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிக்கு அறிவித்தல் விடுக்க நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா நீதிமன்றில் இன்று ஆஜரானார்.