விளையாட்டுத்துறை அமைச்சர், கிரிக்கெட் நிறுவன நிறைவேற்றுக் குழுவிற்கு அழைப்பாணை 

by Staff Writer 15-02-2021 | 2:21 PM
Colombo (News 1st) விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மற்றும் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவினரை எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாக முறைகேடை தடுப்பதற்கான கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்கு முன்னர் புதிய யாப்பை தயாரிக்கும் நோக்குடன் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவிற்கு அமைய இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜூன ஒபேசேகர மற்றும் நீதிபதி மாயாதுன்னே கொரயா முன்னிலையில் இந்த மனு இன்று (15) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன், சிதத் வெத்தமுனி, ஓய்வு பெற்ற நீதிபதி சலீம் மர்ஷூக், கலாநிதி பாலித கோஹோன, ரியன்சி விஜயதிலக்க, குஷில் குணசேகர உள்ளிட்ட 12 பேரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தற்போதைய யாப்பிற்கு அமைய அரசியல் மற்றும் வௌிப்புற அச்சுறுத்தல்கள் அதிகமாக காணப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்த நிலைமையை தடுத்து, சட்டரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா, உப தலைவர் ரவீன் விக்ரமரத்ன, ஜயந்த தர்மதாச, திலக் வத்துஹேவா மற்றும் செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோரும் கிரிக்கெட் நிறைவேற்று குழுவும் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். சுதத் பெரேரா அஷோசியேட்ஸ் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன மற்றும் கலாநிதி மில்ஹான் மொஹமட் ஆகியோர் மனுதாரர்கள் சார்பில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.