பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு ஆட்சேபனை 

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு ஆட்சேபனை 

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2021 | 6:29 pm

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

கிடைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆட்சேபனை தெரிவிப்பதற்கு இன்று (15) நண்பகல் 12 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த ஆட்சேபனைகள் தொடர்பில் அடுத்த வாரத்தில் சம்பள நிர்ணய சபை கூடி ஆராயவுள்ளது.

இதன்பின்னர் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு யோசனையை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டநிறுவனங்களின் சம்மேளனத்தில் இருந்து சிறந்த முடிவு கிடைக்காமையினாலேயே சம்பள நிர்ணய சபை ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை தீர்த்து, 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்காக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார். இரு தரப்பினரும் பேசி கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியுமாயின் அதற்கு ஆதரவு வழங்க நாம் தொடர்ந்தும் தயாராகவுள்ளோம். பெருந்தோட்ட சம்மேளனம் பிரச்சினைகள் முன்வைப்பது அவர்களின் உரிமை. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்தார். எனினும் தோட்ட தொழிலாளர்களின் நலன் உள்ளிட்ட விடயங்களை பாதுகாத்து கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பிரச்சினை தீர்த்து கொள்வதற்கு தேவையான காலம் உள்ளது. 1,000 ரூபா நாளாந்த சம்பளமாக அதிகரிப்பதற்கான வரத்தமானி அறிவித்தலை வௌியிடுவதற்கான செயற்பாடுகளை  முன்னெடுத்து வருகின்றோம்

என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளம் தொடர்பில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

1,000 ரூபா தருவதாக சம்பள நிர்ணய சபை ஊடாக சொல்லியுள்ளார்கள். சம்பள நிர்ணய சபை ஊடாக வந்தால் வர்த்தமானி வௌிவரும். வர்த்தமானி வந்தால் கட்டாயம் 1,000 ரூபா கொடுக்க வேண்டும். அப்படி தரவில்லை என்றால் கம்பனிகளுக்கு எதிராக எங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியும். இன்னும் சில தொழிற்சங்கங்கள் கத்தி கொண்டிருக்கின்றார்கள். 13 நாட்கள் வேலை என கம்பனி சொல்லவில்லை. ஆனால் இவர்கள் பேசி 13 நாட்கள் வேலை வாங்கி கொடுப்பார்கள் போல் விளங்குகின்றது

என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கருத்து வௌியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்