27 பொருட்களின் விலை குறைப்பால் சதொசவிற்கு இலாபம்; மக்களுக்கு பலன் கிட்டியதா?

27 பொருட்களின் விலை குறைப்பால் சதொசவிற்கு இலாபம்; மக்களுக்கு பலன் கிட்டியதா?

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2021 | 8:58 pm

Colombo (News 1st) சதொச மூலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் செயற்பாடு நடைமுறையில் உள்ளதா என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

அதற்கு பதிலளித்த அவர் கொழும்பு சதொச-வில் பொருட்கள் கிடைக்கும் அதே விலையில் மதவாச்சி சதொச-விலும் கிடைக்கிறது. இதுவே பாரிய வெற்றி என பதில் வழங்கினார்.

27 அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து, மூன்று நாட்களில் சதொச விற்பனை நிலையங்களின் வருமானம் 102 வீதமாக அதிகரித்துள்ளதென வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவை மேற்கோள்காட்டி Ceylon Today பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வர்த்தக அமைச்சருக்கு அமைவாக, நாடு பூராகவுமுள்ள 425 சதொச விற்பனை நிலையங்களின் அன்றாட வருமானம், பொருட்களின் விலை குறைக்கப்பட்ட பின்பு 166 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், இது அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பிற்கு முன்னர் 82 மில்லியனாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு தொடர்ச்சியாக 27 பொருட்களையும் விநியோகிப்பதை உறுதி செய்வதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

சதொச-வில் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதால் தனியார் பல்பொருள் விற்பனை நிலையங்களும் குறைத்துள்ளதாக சதொச-வின் தலைவர் தெரிவித்தார்.

நிவாரண விலையில் பொருட்களை விநியோகிக்கும் வேலைத் திட்டம் தொடர்பாக சதொச தலைவர் கருத்து தெரிவித்தார்.

நாம் எதிர்பார்த்த பலன்கள் கிடைத்துள்ளன. இதனை நாம் 3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம். சில இடங்களில் சில பொருட்கள் குறைவாக இருக்கலாம். கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு உள்ளது. ஆனால், அது நாளை மறுதினத்துடன் சரி வந்துவிடும். இந்த போகத்தில் சம்பா நெல்லைப் பெற்று அரிசியை எமக்கு தருவதாக நெல் ஆலை உரிமையாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள். அதற்காக அவர்கள் இரண்டு வார கால அவகாசம் கேட்டுள்ளார்கள். அடுத்ததாக வெளிநாட்டில் இந்திய வெங்காயத்தை நாம் கோரிய போதிலும், பாகிஸ்தான் வெங்காயமே கிடைத்துள்ளது. இன்னும் ஓரிரு வாரத்தில் அது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இறக்குமதியாளர்களிடம் நேரடியாகப் பொருட்களைப் பெறுவதால் இடைத்தரகர் செலவுகளும் இல்லாது போகும். அதன் சலுகையை நுகர்வோருக்கு கொடுத்துள்ளோம்

என சதொச தலைவர் கூறினார்.

எனினும், அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரண விலையில் சதொசவில் மாத்திரமே பொருட்களை கொள்வனவு செய்ய முடிவதாக மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சதொசவில் விலை குறைந்தாலும் ஏனைய இடங்களில் விலை குறைக்கப்படாமைக்கு அரசாங்கம் காரணமில்லை என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்