இலங்கை தேசிய கராத்தே அணியின் தகுதிகாண் போட்டிகள் கொழும்பில் நடைபெற்றன

by Staff Writer 13-02-2021 | 9:06 PM
Colombo (News 1st) இலங்கை தேசிய கராத்தே அணியின் திறன் வீரர்களை தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகள் கொழும்பு டொரிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றன. இந்த தகுதிகாண் கராத்தே போட்டிகளை இலங்கை தேசிய கராத்தே தோ சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. தேசிய தெரிவுக்குழு உறுப்பினர்கள், தேசிய நடுவர் குழாம் மற்றும் இலங்கை கராத்தே தோ சம்மேளன நிர்வாகக் குழுவின் தலைமையில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன. ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரண்டு பிரிவுகளில் காட்டா, குமிட்டே ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டதுடன், 21 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும் 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும் போட்டியிட்டனர். இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட இலங்கை தேசிய கராத்தே தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களும், இலங்கை தேசிய கராத்தே தோ சம்மேளனத்தினால் நியமிக்கப்பட்ட நடுவர்களுக்கான நியமனக் கடிதங்களும் இதன்போது வழங்கப்பட்டன. சர்வதேச கார் பந்தய வீரரான டிலந்த மாலகமுவ அந்த நியமனக் கடிதங்களை வழங்கினார்.