COVID தொற்றுள்ள O/Lமாணவர்களுக்கு மத்திய நிலையங்கள்

COVID தொற்றுக்குள்ளான O/L மாணவர்களுக்காக மாவட்ட ரீதியில் மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன

by Staff Writer 12-02-2021 | 2:59 PM
Colombo (News 1st) COVID தொற்றுக்குள்ளான க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்காக மாவட்ட ரீதியில் விசேட மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, COVID தொற்றுக்குள்ளான மாணவர்கள் தமக்குரிய சிகிச்சை மத்திய நிலையங்களில் இருந்தவாறே பரீட்சைக்கு தோற்ற முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்தார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின் கீழ், குறித்த மத்திய நிலையங்கள் இனங்காணப்படுமெனவும் அவர் கூறினார். இதனிடையே, அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் "தனிமைப்படுப்படுத்தப்பட்ட வகுப்பறை"யொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. COVID தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களும் பரீட்சையில் தோற்றுவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பரீட்சை மத்திய நிலையங்களில் கிருமி நீக்கல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்குமான ஆலோசனைகளும் அதிபர்கள், உப அதிபர்கள், வலய மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். 2020 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 4,513 மத்திய நிலையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.