கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்கலாம்

மீனவர்கள் கொலை: கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நடவடிக்கை எடுக்க முடியும் என சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவிப்பு

by Bella Dalima 12-02-2021 | 4:25 PM
Colombo (News 1st) இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நான்கு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பல கட்டுப்பாடுகளும் வரையறைகளும் காணப்படுவதாகவும் அவற்றுக்கு உட்பட்டே செயற்பட முடியும் எனவும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய பாராளுமன்றத்தில் பிஜு ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் சஸ்மித் பாத்ராவின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே, இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், டெல்லியிலுள்ள இலங்கை தூதரகம், இலங்கை வௌிவிகார அமைச்சு உள்ளிட்ட தரப்பினரிடம் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வித காரணத்திற்காகவும் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்ளக்கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளதாகவும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக 'த ஹிந்து' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை மீட்பதற்கான முயற்சிகளையும் விரைவுபடுத்துவதாக கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் 173 படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாவும் அவற்றுள் 36 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எஞ்சியுள்ளவற்றில் 62 படகுகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.