தீகவாபி புண்ணிய பூமியை புனரமைக்கும் செயற்றிட்டத்திற்கு நிதி திரட்டும் வைபவம்

by Staff Writer 12-02-2021 | 8:35 PM
Colombo (News 1st) தீகவாபி புண்ணிய பூமியை புனரமைக்கும் செயற்றிட்டத்திற்கு நிதி திரட்டும் அங்குரார்ப்பண வைபவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று நடைபெற்றது. கொழும்பு - 7, ஶ்ரீ சம்போதி விகாரையில் நடைபெற்ற அங்குரார்ப்பண வைபவத்தில் ஶ்ரீ லங்கா ராமக்ஞா பீடத்தின் மகா நாயக்கர் மகுலேவே விமல தேரர், பிரதான மகா சங்கத்தினருடன் வருகை தந்திருந்தார். ஜனாதிபதி, பிரதமர், முப்படை மற்றும் பொலிஸ் தலைவர்கள் அதில் கலந்துகொண்டதுடன், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் உரிமைகளை நிர்வகிக்கும் ஜனாதிபதி செயலணியின் தலைமையில் தீகவாபி புண்ணிய பூமியை புனரமைக்கும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தீகவாபி தூபியின் புனரமைப்புப் பணிகளை மூன்றாண்டுகளுக்குள் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அகுல்கமுவே அரியனந்த தேரரின் அறிவுரைக்கு அமைவாக பங்களிப்பு சபை 100 மில்லியன் ரூபாவை தீகவாபி புனர்நிர்மாண நிதியத்திற்கு இன்று வழங்கியது. இந்த நிதியத்திற்கு இலங்கை இராணுவம் 10 மில்லியன் ரூபாவை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கரங்களால் நன்கொடையாக வழங்கியதுடன், விமானப்படையும் கடற்படையும் இந்த தலா 5 மில்லியன் ரூபாவை வழங்கின.