குருந்தூர் மலையில் கண்டுபிடிக்கப்பட்டது தாராலிங்கம் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் N.K.S. திருச்செல்வம்

by Bella Dalima 12-02-2021 | 8:45 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - தண்ணீரூற்று, குருந்தூர் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் அநுராதபுர காலத்தை ஒத்த சின்னம் என தொல்பொருட்கள் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், அவை வேறு காலத்திற்கு உட்பட்டவை என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட தொல்பொருள் சிதைவுகள், அநுராதபுர காலத்திற்குரியவை என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசியர் அநுர மனதுங்க தெரிவித்திருந்தார். அநுராதபுரம் காலத்திற்குரிய பௌத்த தூபி காணப்பட்டமைக்கான சான்றுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க சுட்டிக்காட்டியிருந்தார். இந்த அகழ்வுப் பணிகள் இம்மாத இறுதியில் நிறைவு செய்யப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது தொல்பொருள் சின்னமாக கிடைக்கப்பெற்றிருப்பது 8 பட்டைகள் கொண்ட அஷ்ட லிங்கம் எனப்படும் தாராலிங்கம் என வரலாற்று ஆய்வாளர் N.K.S. திருச்செல்வம் குறிப்பிட்டார். இது தொடர்பில் தமிழ்நாட்டில் இருக்கும் வரலாற்று ஆய்வாளர், இராமநாதபுரம் தொல்லியல் துறை தலைவர் ராஜகுரு என்பவரிடம் உறுதிப்படுத்திக்கொண்டதாக N.K.S. திருச்செல்வம் கூறினார். இதேவேளை, பொலன்னறுவை 13 ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, வன்னி பிரதேச நிலப்பரப்பு பெருமளவிற்கு தமிழர்களின் ஆதிக்கத்திற்கு பின்னர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து வந்துள்ளன. இங்குள்ள பௌத்த ஆலயம் 13 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருந்திருக்கும் என்பது வரலாற்று உண்மை. ஆயினும், பௌத்த ஆலயம் தமிழ் மக்களுக்கு உரியதா, சிங்கள மக்களுக்கு உரியதா என்பதனை ஆய்வுகளில் கிடைக்கின்ற நம்பகரமான கல்வெட்டு, நாணயங்களைக் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என யாழ். பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் குறிப்பிட்டார். இதனிடையே தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சிறந்த முடிவுகளை பெற்றுத்தருவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.