Colombo (News 1st) இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது.
கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி இருப்பு 5.1 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
மத்திய வங்கியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் நிறைவில் 4.8 பில்லியன் டொலர் வௌிநாட்டு இருப்பு இருந்ததாகவும் தற்போது அது குறைவடைந்திருப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் குறிப்பிட்டார்.
எனினும், கடனை திருப்பி செலுத்தும் நடவடிக்கைக்கே முன்னுரிமை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார வளர்ச்சி தொடர்பாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெளிவுபடுத்தினார்.
அவர் தெரிவித்ததாவது,
5.5 முதல் 6 வீதம் இடையில் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 2021 ஆம் ஆண்டு நிறைவு செய்ய முடியும். பணவீக்கம் ஸ்திரத்தன்மையுடன் இருக்கின்றமை எமக்கு சாதகமானது. அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் தற்போது வரையறுக்கப்பட்டாலும் ஜனவரி இறுதியில் பணவீக்கத்தை 3 வீதமாக தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளது. மிகவும் அரிய செயற்பாடாக நமது நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறையை குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது. மூன்றாவது காலாண்டில் இந்த நிலை மேலும் உயரலாம் என்று நான் நினைக்கிறேன். 2021 ஆம் ஆண்டு வர்த்தக சந்தையில் இடைவெளி மேலும் குறைவடையலாம் என்று எதிர்பார்க்கிறோம்.