தனியார் சட்டங்கள் அமுலில் உள்ள நிலையில் முஸ்லிம் சட்டங்களை மாத்திரம் இரத்து செய்ய முடியாது: அலி சப்ரி

தனியார் சட்டங்கள் அமுலில் உள்ள நிலையில் முஸ்லிம் சட்டங்களை மாத்திரம் இரத்து செய்ய முடியாது: அலி சப்ரி

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2021 | 7:27 pm

Colombo (News 1st) ஒரே நாடு, ஒரே சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டுமானால், முஸ்லிம் சட்டங்களை மாத்திரம் இரத்து செய்வதனூடாக அதனை செய்ய முடியாது என நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் அண்மையில் சபையில் வினவியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் இன்று பதில் வழங்கினார்.

இதன்போது, நாட்டில் கண்டிய விவாக விவாகரத்து சட்டம், யாழ்ப்பாண விவாக தேச வழமைச் சட்டம், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம், பௌத்த விகாரைகள் சட்டம், இந்து கலாசார சட்டம், முஸ்லிம் வக்கூப் சட்டம், Church of Ceylon சட்டம் போன்ற தனியார் சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், முஸ்லிம் சட்டங்களை மாத்திரம் இரத்து செய்ய முடியாது என அலி சப்ரி சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் சட்டத்தின் கீழ், முஸ்லிம் பெண்கள் குறிப்பாக சிறு பிள்ளைகளுக்கு அவர்களுடைய விருப்பமின்றி பலவந்தமாக திருமணம் செய்து வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அது தவறான கருத்து. நடைமுறையில் அது இடம்பெறுவதில்லை. அந்த பெண்ணின் விருப்பத்தைப் பெற்றுக்கொண்டு தந்தை அல்லது பாதுகாவலர் கையொப்பமிடுவார். அதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் கலந்துரையாடி எம்மால் அதனை மாற்ற முடியும்

என நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்