மேற்கு முனையம் தொடர்பில் கூட்டு முதலீட்டு திட்டம்

by Staff Writer 10-02-2021 | 9:00 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில் கூட்டு முதலீட்டு திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது. கிழக்கு முனைய முதலீட்டு திட்டத்தை அரசாங்கம் இடைநிறுத்திய பின்னர் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. மேற்கு முனையத்தை இந்திய அரசாங்கம், ஜப்பான் அரசாங்கத்தினால் பெயரிடப்படும் தரப்பு, இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியன இணைந்து அரச தனியார் திட்டமாக 35 வருட காலத்திற்கு அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 31 ஆம் திகதி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவினால் இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கொழும்பு துறைமுகத்தின் வர்த்தக வாய்ப்புகளை பாதுகாப்பதற்காக, கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களை 2023 ஆம் ஆண்டாகும் ​போது சமமான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தேசிய துறைமுக திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, உத்தேச மேற்கு முனையத்தை 64 ஹெக்டேரில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபையின் நீண்ட கால அபிவிருத்தி திட்டங்களை ஆராய்கின்ற போது, மேற்கு முனையத்தை அண்மித்த பகுதியில் மற்றுமொரு விசேட திட்டத்தை செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி மேற்கு முனையத்தில் மிதக்கும் இரண்டு LNG களஞ்சியங்கள் அமைக்கப்பட வேண்டும். LNG எரிபொருளை எதிர்காலத்தில் நாட்டில் பயன்படுத்துவதற்கு தற்போது அடிப்படைக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே LNG விநியோகம் எதிர்காலத்தில் நாட்டின் சந்தையில் அதிக இலாபம் பெறும் விடயமாக அமையலாம். எனினும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு பதிலாக 85 வீத பங்குகள் கிடைக்கும் வகையில் மேற்கு முனையத்தில் முதலீடு செய்வதற்கு இந்தியா இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கவில்லையென Indian Express பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.