ரிஷாட் - பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடல்

by Staff Writer 09-02-2021 | 6:02 PM
Colombo (News 1st) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமகால அரசியலில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாட்டில் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது உட்பட முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பில் பிரதி உயர்ஸ்தானிகரிடம் எடுத்துக்கூறியதாக ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிக்கும் விடயத்திற்கு நியாயம் பெற்றுத்தர பாகிஸ்தான் பிரதமரது விஜயம் உதவ வேண்டும் என எதிர்பார்ப்பதாக இவர்கள் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகரிடம் கூறியுள்ளனர். அத்துடன், இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்துப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குழுவினர் இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.