மியன்மார்: ஐ.நாவின் யோசனைக்கு அமெரிக்கா,சீனா ஆதரவு

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஐ.நா பாதுகாப்பு பேரவையின் யோசனைக்கு அமெரிக்காவும் சீனாவும் ஆதரவு

by Bella Dalima 09-02-2021 | 7:53 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் பல நாட்களின் பின்னர் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஒற்றுமையை வௌிப்படுத்தி மியன்மாரில் ஜனநாயக மாற்றத்திற்கான ஆதரவை வழங்கியுள்ளன. ஜனநாயக அறிவுறுத்தல்கள் செயற்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை, வன்முறைகளை நிராகரிப்பதாகவும் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் அடிப்படை மனித சுதந்திரத்திற்கு இடமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஆங் சாங் சூ கி உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன், ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அங்கத்துவ நாடுகள் பாதுகாப்பு பேரவையினூடாக கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், மியன்மார் பொலிஸார் நாட்டின் தலைநகர் நேபிடோவில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தினர் . முதலில் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், இறப்பர் குண்டுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுப் பேரணிகளின் பொருட்டு, மக்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இன்றுடன் நான்காவது நாளாகின்ற போதிலும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.