தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்படுமா?

by Bella Dalima 09-02-2021 | 7:58 PM
Colombo (News 1st) தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1040 ரூபாவை வழங்க வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் வாக்கெடுப்பு மூலம் நேற்று (08) தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், நாளாந்த சம்பளத்தை மாத்திரமே சம்பள நிர்ணய சபையினால் தீர்மானிக்க முடியுமெனவும் வேலை நாட்களைத் தீர்மானிக்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கூட்டு ஒப்பந்தம் இதுவரை இரத்து செய்யப்படவில்லை எனவும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபபில் அவர் குறிப்பிட்டார். தொழிலாளர்களுக்கு 13 நாட்கள் தான் வேலை வழங்கப்படும் என புரளி உலவுவதாகவும் கம்பனிக்காரர்கள் அவ்வாறு தெரிவிக்கவில்லை எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார். அவ்வாறு 13 நாட்கள் மாத்திரம் கம்பனிகள் தொழில் வழங்குவதாக இருந்தால், 13 நாட்களுக்கு மாத்திரம் லீஸ் கட்டுமாறும் ஏனைய 13 நாட்களுக்கு தாம் பொறுப்பெடுத்து தோட்டத்தை நடத்துவதாகவும் செந்தில் தொண்டமான் கூறினார். முதலாளிமார் சம்மேளனம் நினைப்பது ​போல் 13 நாட்களுக்கு தொழிலாளர்களுக்கு வேலை வழங்கி, குறிப்பிட்ட தொகையை வழங்க முடியும் என்று நினைத்தால், மீண்டும் பாரிய போராட்டத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் கிட்ணன் செல்வராசா எச்சரித்தார். வெறும் சம்பளத்தை நிர்ணயித்து விட்டு, அரசாங்கம் பிரச்சினை முடிந்துவிட்டது என்று வெற்றிக் களியாட்டத்தில் ஈடுபட முடியாது என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையக பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் குறிப்பிட்டார். இதேவேளை, சம்பள நிர்ணய சபையின் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் திறைசேரியில் இருந்து பணத்தைப் பெற்றாவது சம்பளத்தை வழங்கவுள்ளதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அரச பெருந்தோட்ட யாக்கமோ அல்லது தோட்ட நிறுவனங்களோ சம்பளத்தை வழங்காவிட்டால், தோட்டங்களை அரசாங்கத்திடம் வழங்கிவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் நிமல் சிறிபால டி சில்வா கூறினார். சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாவிட்டால் தோட்டங்களை அரசு மீள பெற்றுக்கொள்வதற்கான அதிகாரம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டதையடுத்து, நோர்வுட் எல்பொட பிரதேச கோவிலில் விசேட பூஜைகள் நடைபெற்றன. இதன்போது, பாற்சோறு சமைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது மகிழ்ச்சியை வௌிப்படுத்தியிருந்தனர். எவ்வாறாயினும், ஆயிரம் ரூபாவை செலுத்தாத பெருந்தோட்டக் காணிகளை கையகப்படுத்தும் முயற்சியின் பின்னணியில் வேறு நோக்கம் இருப்பதாக அகில இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் குறிப்பிட்டது. அதானி நிறுவனத்திற்கு எதிராக இந்திய தொழிலாளர்கள் போராடும் நிலையில், சிலவேளை  பெருந்தோட்டக் காணிகள் அதானி நிறுவனத்திடம் கையளிக்கப்படலாம் என அகில இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் சந்தேகம் வௌியிட்டார்.