ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இந்தியா?

by Staff Writer 09-02-2021 | 8:36 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இந்தியா உள்ளதென்பதே தமது கருத்து என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (08) BBC சிங்கள சேவைக்கு தெரிவித்திருந்தார். தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த பாராளுமன்ற செயற்குழு உறுப்பினர் என்ற வகையில் முன்வைக்கப்பட்ட சில விடயங்களை சுட்டிக்காட்டி அவர் தனது நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வினவப்பட்டது. அது நலிந்த ஜயதிஸ்ஸவின் நிலைப்பாடு என குறிப்பிட்ட அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, குறித்த விடயம் தொடர்பில் முறையான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பகிரங்கப்படுத்திய பின்னர் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் எனவும் கூறினார். இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் குற்ற விசாரணை பூரணமடையவில்லை என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார். இதனால் தாமதமின்றி விசாரணையை நிறைவு செய்யுமாறு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளதாக, சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்த எழுத்துமூல அறிக்கை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகளை, ஜனாதிபதியின் செயலாளரிடம் பெற்று, அதில் அம்பலமாகியுள்ள விடயங்களின் அடிப்படையில் மேலதிக சாட்சி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். 14 நாட்களுக்குள் முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு 30 பக்கங்கள் கொண்ட ஆலோசனைக் கோவையை சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ளார்.

ஏனைய செய்திகள்