ENGvsIND: முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: 227 ஓட்டங்களால் இங்கிலாந்து அபார வெற்றி

by Staff Writer 09-02-2021 | 6:27 PM
Colombo (News 1st) இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 227 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றியீட்டியது. இங்கிலாந்து நிர்ணயித்த 420 ஓட்டங்கள் வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்தியா 192 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்து தோல்வியடைந்தது. ஒரு விக்கட் இழப்பிற்கு 39 ஓட்டங்களுடன் இன்றைய ஐந்தாம் நாளில் இந்தியா அதன் இரண்டாம் இனிங்ஸை தொடர்ந்தது. சட்டீஸ்வர் புஜாரா இன்றைய தினத்தில் 03 ஓட்டங்களையே மேலதிகமாகப் பெற்ற நிலையில், 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சுப்மன் கில்லும் அணித்தலைவர் கோலியும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். சுப்மன் கில் தனது மூன்றாவது டெஸ்ட் அரைச்சதத்தைக் கடந்ததுடன், 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அஜிங்கியா ரஹானா ஓட்டமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். முதல் இனிங்ஸில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ரிசப் பந்த் 11 ஓட்டங்களுடனும் வொஷிங்டன் சுந்தர் ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் ஜக் லீச் 4 விக்கட்களையும், ஜேம்ஸ் அன்டர்சன் 3 விக்கட்களையும் வீழ்த்தினர். போட்டியின் முதல் இனிங்ஸில் இங்கிலாந்து 578 ஓட்டங்களைக் குவித்தது. அணித்தலைவர் ஜோ ரூட் 218 ஓட்டங்களைப் பெற்றார். இந்தியா முதல் இனிங்ஸில் 337 ஓட்டங்களைப் பெற்றது. ரிசப் பந்த் 91 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் 85 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 241 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 178 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தது. பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 6 விக்கட்களை வீழ்த்தினார். போட்டியின் நாயகனாக இரட்டைச்சதம் விளாசிய இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் தெரிவானார். இதனையடுத்து, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலையிலுள்ளது. இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியும், சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.