MTV நிறுவனம் மீதான வழக்கில் எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்ய இணக்கம்

by Staff Writer 08-02-2021 | 9:45 PM
Colombo (News 1st) Rapid Antigen பரிசோதனை தொகுதிகள் தொடர்பில் MTV செனல் தனியார் நிறுவனம் ஔிபரப்பிய செய்திகளுக்கு எதிராக, ஜோர்ஜ் ஸ்டுவட் ஹெல்த் தனியார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு கொழும்பு மாவட்ட நிதீமன்றத்தின் இலக்கம் ஒன்று மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இன்று (08) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரு தரப்பினரும் வாய்மூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு தயாரா என மாவட்ட நீதிபதி வினவிய போது, அதற்கு தயார் என MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா கூறினார். பிரதிவாதிகள் தரப்பு ஒரு ஊடக நிறுவனம் என்பதால் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு காரணமாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் தொடர்பாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். வாய்மூல சமர்ப்பணங்களுக்கு பதிலாக விரிவான எழுத்து மூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நீதிபதி இதன்போது இரு தரப்பினருக்கும் அறிவித்தார். இரு தரப்பிலும் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணிகள் அதற்கு இணக்கம் தெரிவித்தனர். இதன்பிரகாரம் மார்ச் 15 ஆம் திகதியாகும் போது இந்த வழக்கின் இரு தரப்பினரும் எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் சட்டத்தரணி G.G. அருள்பிரகாசத்தின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, சட்டத்தரணிகளான ஜீவந்த ஜயதிலக்க, நிரஞ்சன் அருள்பிரகாசம், தமித்த கருணாரத்ன, என்.கே. அசோக்பரன் மற்றும் மியுரு இகலஹேவா ஆகியோர் ஆஜராகியிருந்தனர். முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் சட்டத்தரணி ருவந்த குரே ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.