பூர்வீக காணிக்கான உரிமை கோரி மனு தாக்கல்

பூர்வீக காணிக்கான உரிமை கோரி ஆதிவாசிகளின் தலைவர் மனு தாக்கல்

by Staff Writer 08-02-2021 | 2:51 PM
Colombo (News 1st) ஆதிவாசிகளின் பூர்வீக காணிகளை கையகப்படுத்தி முன்னணி நிறுவனங்களுக்கு சோளச்செய்கை மேற்கொள்வதற்காக வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்குரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ மற்றும் சுற்றாடல் நீதிக்கான மையத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (08) ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர், வனஜீவராசிகள் அமைச்சர், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். தங்களுடைய மக்கள் நூற்றாண்டு காலமாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காக பாதுகாத்த வனத்தில், ஐயாயிரம் ஏக்கருக்கும் அதிக நிலப்பரப்பை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்தி பாரயளவிலான சோளச்செய்கைக்கு வழங்குவதால் தமது வாழ்வாதாரம் இழக்கப்படுவதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ மற்றும் சுற்றாடல் நீதிக்கான மையத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த காணியை நிறுவனங்களுக்குப் பெற்றுக்கொடுப்பதனூடாக றம்புக்கன் ஓயாவுக்கு நீரை கொண்டு செல்லும் கால்வாய்க்கு சட்டவிரோதமான முறையில் தடை ஏற்படுத்தப்படுவதால் பாரிய சூழல் பாதிப்பும் ஏற்படக்கூடும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இந்த செயற்பாடுகளை நிறுத்துமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாரர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.