பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியின் பிரகடனம் வௌியீடு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியின் பிரகடனம் வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

08 Feb, 2021 | 8:37 pm

Colombo (News 1st) 10 அம்சக் கோரிக்கைகளுடனான எழுச்சிப் பிரகடனத்துடன் அம்பாறை பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான மக்கள் பேரணி ​யாழ்ப்பாணம் – பொலிகண்டியில் நேற்று (07) மாலை நிறைவுபெற்றது.

பெருந்திரளான மக்களின் உணர்வுபூர்வமான பங்குபற்றுதலுடன் பேரணியின் இறுதி நாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நீதிக்கான கவனயீர்ப்புப் பேரணியின் இறுதி நாள் பயணம் கிளிநொச்சியில் இருந்து சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஊடாக பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையை பறைசாற்றிய இந்தப் பேரணியில் சமயத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பேரணியில் பங்குபற்றியிருந்தனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான பேரணியின் நிறைவாக எழுச்சிப் பிரகடனமும் வாசிக்கப்பட்டது.

தமிழ் பேசும் சமூகம் எதிர்நோக்குகின்ற 10 முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வினை வலியுறுத்தும் கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.

  • காணாமல் போனோருக்கு நீதி
  • தமிழர் தாயகத்திலிருந்து இராணுவம் வௌியேற வேண்டும்
  • தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்
  • நில ஆக்கிரமிப்பு , சிங்கள மயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும்
  • பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்
  • காணிகள் மீள கையளிக்கப்படல் வேண்டும்
  • அரசியல் தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்
  • தமிழர் மீதான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்
  • மலையக மக்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்
  • ஜனாஸா விவகாரத்தில் மத உரிமை மதிக்கப்பட வேண்டும்

எனும் 10 அம்ச கோரிக்கைகள் நீதிக்கான மக்கள் பேரணியின் போது முன்வைக்கப்பட்டன.

எழுச்சிப் பேரணியின் நினைவுக்கல் பொலிகண்டியில் நாட்டப்பட்டதை அடுத்து பேரணி நிறைவுபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்