Chakka Jam:சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய விவசாயிகள்

மூன்று மணித்தியால ''Chakka Jam'' சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்த இந்திய விவசாயிகள்

by Bella Dalima 06-02-2021 | 6:07 PM
Colombo (News 1st) இந்தியாவின் ஹரியானாவில் பிரதான நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயிகள் இன்று சக்கா ஜாம் (Chakka Jam) போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். மூன்று மணித்தியாலங்கள் நீடித்த Chakka Jam நாடுதழுவிய வீதித்தடை போராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு விவசாயிகளின் நெடுஞ்சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது அம்பியுலன்ஸ், பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்ற வாகனங்கள், அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்கான வாகனங்கள், பள்ளி வாகனங்கள் ஆகியவை தடுத்து நிறுத்தப்படவில்லை. அவற்றை விவசாயிகள் அனுமதித்தனர். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைதியான முறையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். உத்தரபிரதேஷ் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களிலும் வீதித்தடைகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டிருந்தன. இதேவேளை, போராட்டங்களைத் தடுக்கும் வகையில் பெங்களூரில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் 50,000 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் மூடப்பட்டிருந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இன்று 73 ஆவது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.