செலவுகளை ஈடு செய்ய முடியாதுள்ளதால் 1000 ரூபா வழங்க முடியாது: பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம் அறிவிப்பு

by Staff Writer 06-02-2021 | 9:18 PM
Colombo (News 1st) சம்பள நிர்ணய சபையில் ஆகக்குறைந்த சம்பளம் தீர்மானிக்கப்பட்டால் அதனை வழங்கத் தயார் என இலங்கை பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. எனினும், செலவுகளை ஈடு செய்ய முடியாமையினால் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்க முடியாது என சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை நியூஸ்ஃபெஸ்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டார்.
அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரித்தால் ஒரு கிலோகிராம் தேயிலையின் உற்பத்தி செலவு 830 ரூபா அல்லது 825 ரூபாவாக அமையும். கொழும்பு தேயிலை ஏலத்தில் ஒரு கிலோகிராம் தேயிலையை 580 ரூபாவிற்கு விற்கின்றோம். 580 ரூபா வருமானத்தைப் பெற்று, நாம் எவ்வாறு 825 ரூபாவை செலவு செய்வது?
என ரொஷான் இராஜதுரை கேள்வி எழுப்பினார்.
1000 ரூபா வழங்கினால், உற்பத்தி செலவு 838 ரூபாவாக அமையும். அதனை கணக்கிட்டுப் பார்க்கலாம். உற்பத்தி செலவில் தொழிலாளர்களுக்கான செலவு 67 வீதமாகும். கொழுந்து பறிக்கும் செலவு 35 வீதம். எனவே 1000 ரூபாவை 18 ஆல் பிரித்து பின்னர் 35 ஆல் பெருக்கினால் உண்மையான உற்பத்தி செலவை கண்டுகொள்ள முடியும். இதனை வழங்குவதில் எமக்கு விருப்பம் இல்லாமல் இல்லை. தேயிலை விலை 850 ரூபாவிற்கு சென்றால், முகாமையாளர் என்ற வகையில், எமது ஊழியர்களுக்கு அதிக சம்பளத்தையும் வசதிகளையும் வழங்க நாமும் விரும்புகின்றோம். அதுவே சிறந்த முகாமைத்துவம். எனினும், வழங்க முடியாத ஒன்றில் நாம் கையொப்பமிட்டால் 10 ஆம் திகதி அதனை செலுத்த முடியாமல் போகும் பட்சத்தில், அது இதனைவிட பெரிய பிரச்சினையாக மாறும்
என அவர் விளக்கமளித்தார். இதேவேளை, தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்த போதிலும், சில தோட்ட நிறுவனங்கள் அதனை வழங்கவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும். தோட்ட நிறுவனங்களினால் அந்த ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க முடியாவிட்டால், தோட்டங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு நாம் அவர்களுக்கு கூறுகின்றோம். அந்த தோட்ட நிறுவனங்களை நடத்திச் செல்லவும், தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்கவும் அரசாங்கத்தினால் முடியும்
என மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்