by Staff Writer 05-02-2021 | 8:13 PM
Colombo (News 1st) 1000 ரூபா சம்பள உயர்வினை வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை இன்று முன்னெடுத்தனர்.
கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
கந்தப்பளை, ராகலை, உடப்புஸ்ஸல்லாவை பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த பகுதிகளிலுள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையிலும் சில பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஒரு சில பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கண்டி - ரங்கலவைச் சேர்ந்த 21 தோட்ட மக்கள் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் ரங்கல நகரில் உள்ள கடைகள் காலை 9 மணியிலிருந்து 10 மணி வரை ஒரு மணித்தியாலம் மூடப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஹட்டனிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர்.
பொகவந்தலாவை , நோர்வுட் , ஹட்டன், கொட்டகலை, பத்தனை, வட்டவளை பகுதிகளிலுள்ள பெருமளவிலான தோட்டத் தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டது.
ஹட்டனிலுள்ள தனியார் வர்த்தக நிலையங்கள் பெருமளவில் இயங்காத நிலையில், ஏனைய பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்றன.
கேகாலை - தெரணியகலையிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி தெரணியகலை நகரில் திரண்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையினை ஏற்பாடு செய்திருந்தது.
மாத்தளையிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களும் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மாத்தளை வர்த்தக சங்கத்தின் அழைப்பின் பேரில் அங்குள்ள வர்த்தக நிலையங்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை மூடப்பட்டன.
அத்துடன், கெலகம தோட்டத்தில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதனிடையே தம்பலகல தோட்ட ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சம்பள உயர்வு வேண்டி விசேட பூஜை வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
மாத்தளை - உடபுஸ்ஸல்லாவ பகுதிக்கு உட்பட்ட யட்டத்த , புதுத்தோட்டம், மாளிகாதென்ன தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வலயுறுத்தி தேயிலைத் தொழிற்சாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தலவாக்கலையில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தலவாக்கலை, லிந்துலை, டயகம, அக்கரப்பத்தனை உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன.
புஸ்ஸலாவை பகுதியிலுள்ள சுமார் 15 தோட்டங்கள் 48 பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புஸ்ஸலாவை, வகுகபிட்டிய, தவலதென்ன வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடியிருந்தனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை வலியுறுத்தி புஸ்ஸலாவை ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி தெனியாய - மத்துக்கோவை தோட்ட மக்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துடன் கவனயீர்ப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்தனர்.
இரத்தினபுரி - ஹேயஸ் தோட்டத்தின் 5 தோட்டப் பிரிவுகளை சேர்ந்த மக்களும் பனின்கந்தை தோட்ட மக்களும் இணைந்து இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தோட்டங்கள் இன்று முடங்கின.
1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து தலைநகர் கொழும்பிலும் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
கொழும்பு - புறக்கோட்டை ஐந்து லாம்பு சந்தியிலேயே இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்ப்பட்டது.
நாட்டின் சில மாவட்டங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கான அழைப்பினை ஆளும் தரப்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்திருந்தது.
இந்தப் போராட்டத்திற்கான நேரடி ஆதரவையோ எதிர்ப்பினையோ தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்திருக்கவில்லை.
எனினும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்பில் தாம் அதிகக் கரிசனை கொண்டுள்ளதாகவும் அது தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணி தெரிவித்துள்ளது.
சம்பள உயர்வினை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும் சம்பள அதிகரிப்பினை அரசாங்கம் பெற்றுத்தருவது இந்த போராட்டத்தின் ஊடாக உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.