7 பேர் விடுதலை: குடியரசுத் தலைவரே தீர்மானிக்கலாம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: 7 பேரின் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவரே முடிவெடுக்க முடியும் என ஆளுநர் தெரிவிப்பு

by Bella Dalima 05-02-2021 | 2:46 PM
Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே உள்ளதாக தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நேற்று (04) உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் என கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலினும் இந்த விடயம் தொடர்பில் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருப்பதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை கடந்த 25 ஆம் திகதி ஆளுநர் தரப்பு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள நிலையில், தற்போது உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த அறிவிப்பின் பின்னர் தமிழக முதல்வர் ஆளுநரை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரை விடுவிக்க வலியுறுத்தி தமிழக அமைச்சரவை கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் ஆளுநர் முடிவு வெளிவராமல் இருந்தது. இது குறித்து மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் முதல் நாளில் குடியரசுத் தலைவருக்கே இந்த வழக்கில் முடிவெடுக்க அதிகாரம் இருப்பதாகக் கூறி, அடுத்த நாளே ஆளுநர் முடிவெடுப்பார் என்று கூறியிருந்தார். உச்ச நீதிமன்றமும் ஒரு வார காலத்திற்குள் ஆளுநர் இது குறித்து முடிவெடுப்பார் என்று கூறி இந்த வழக்கை ஒத்திவைத்திருந்த நிலையில், தற்போது ஆளுநர் தனது கருத்தை வெளியிட்டு வழக்கை நிராகரித்துள்ளார்.