பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி வவுனியாவை சென்றடைந்தது

by Staff Writer 05-02-2021 | 9:29 PM
Colombo (News 1st) தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்நிறுத்தி முன்னெடுக்கப்படும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி இன்று திருகோணமலையிலிருந்து ஆரம்பமானது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படும் பேரணியின் இன்றைய பயணம் திருகோணமலை சிவன் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது. மடத்தடி சந்தி, மூன்றாம் கட்டை வழியாக அலஸ் தோட்டத்தை பேரணி சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து கொக்கிளாய் - கொஹம்ப சந்தி பகுதியை பேரணி சென்றடைந்த போது, பொலிஸார் தடையுத்தரவை காண்பித்தனர். எனினும், பேரணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. பேரணி நீராவிப்பிட்டி ஆலயத்தை சென்றடைந்ததுடன், அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டனர். முல்லைத்தீவிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை பேரணி சென்றடைந்துள்ளது. பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து, பேரணி வவுனியாவை சென்றடைந்தது. இதனிடையே, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான மண் இதன்போது மாணவர்களால் எடுக்கப்பட்டது. இதேவேளை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயற்பாடு இன்று யாழ். தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்டது. சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் பேரணி தொடர்பில் மக்கள் தௌிவுபடுத்தப்பட்டனர்.