இலங்கை மீள செலுத்திய 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் சலுகை எதற்காக பெறப்பட்டது?

by Staff Writer 05-02-2021 | 9:10 PM
Colombo (News 1st) இந்திய ரிசர்வ் வங்கி சார்க் பரிவர்த்தனை நிதியிலிருந்து இலங்கைக்கு வழங்கிய 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் சலுகையை மீள செலுத்தியதாக இலங்கை மத்திய வங்கி இன்று அறிவித்தது. இந்த கடன் சலுகை எதற்காக வழங்கப்பட்டது? பரிவர்த்தனை நிதியிலிருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் சலுகையை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளதாக கடந்த வருடம் ஜூலை மாதம் 25 ஆம் திகதி இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன. இந்த கடன் சலுகை 2022 ஆம் ஆண்டு நவம்பர் வரை இருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த 400 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை மீள செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று அறிவித்தது. 400 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு மூன்று மாத காலத்தை வழங்குமாறு ஜூலை மாதம் இலங்கை மத்திய வங்கி இந்தியாவின் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது. அந்த மூன்று மாத காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டது. இதனை மேலும் நீடிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்தில் இலங்கை இணக்கப்பாட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் இதுவரை அவ்வாறான இணக்கப்பாடு எட்டப்படவில்லையெனவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டது. அத்துடன் சீனாவிடம் கோரியுள்ள 1500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் சலுகை இந்த மாதம் கிடைக்கும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.