by Staff Writer 05-02-2021 | 4:03 PM
Colombo (News 1st) இந்திய மத்திய வங்கியிடம் அந்நிய செலாவணி சலுகையின் கீழ் இலங்கையால் பெற்றுக்கொள்ளப்பட்ட 400 மில்லியன் டொலர் கடன் மீள செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி கடன் தவணை நிறைவடைந்துள்ள நிலையில், உரிய காலப்பகுதியில் கடன் திரும்பி செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நவம்பர் வரை குறித்த கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, சீனா மற்றும் இந்தியாவிடமிருந்து அந்நிய செலாவனியூடாக கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
அதற்கமைய, சீனாவிடமிருந்து 1500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி இம்மாதம் கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடன் அந்நிய செலாவனி பறிமாற்று கடன் சலுகையை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.