தெற்காசியாவில் நீண்ட சுரங்கக்குழாய் நீர்த்திட்டப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

தெற்காசியாவில் நீண்ட சுரங்கக்குழாய் நீர்த்திட்டப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2021 | 2:19 pm

Colombo (News 1st) தெற்காசியாவில் நீண்ட சுரங்கக் குழாய் நீர்த்திட்ட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அனுராதபுரம் பளுகஸ்வெவயில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

வைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதியை, அமைச்சர் சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரமுகர்கள் வரவேற்றனர். அதன் பின்பு வேலைத்திட்டம் தொடர்பாக அதிகாரிகள் ஜனாதிபதிக்கு தெளிவூட்டினர்.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த ஜாதிபதி, சுரங்கக் குழாய் நீர்ப்பாசன நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

நீர்ப்பாசன சுபீட்சம் வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் வடமத்திய மாகாண மகா வாவித் திட்டத்தின் முதற்கட்டமாக இந்த சுரங்கக் குழாய் நிர்மாணிக்கப்படுகிறது.

மொறகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த்தேக்கங்களின் எஞ்சிய நீர் 65 கிலோமீட்டர் தூரம் கொண்ட வாவியூடாக யகல்ல வரை கொண்டு செல்லப்படவுள்ளது.

வாவித்திட்ட நிர்மாணத்தின் போது 3 புண்ணிய பூமிகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளதுடன், இதனால் சுற்றாடலுக்கும் வனவிலங்குகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்காக இந்த சுரங்கக் குழாய் நிர்மாணிக்கப்படுகிறது.

அலஹெர – கோதுருவாவியில் ஆரம்பமாகும் சுரங்கக் குழாயின் எல்லையாக பலுகஸ்வெவ, மஹீகஸ்வெவ அமைந்துள்ளது.

6 வருடங்களில் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்ட வட மத்திய மாகாண வாவித் திட்டம் 4 வருடங்களுக்குள் 2025 ஆம் ஆண்டு நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினதும் ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டத்தின் சுரங்கக் குழாய்க்காக 244 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது.

வைபவத்தின் பின்னர் யாங் ஓயாவை பயன்படுத்தி நீர்ப்பற்றாக்குறைக்கு தீர்வு வழங்கக்கோரி விவசாயிகள் மகஜர் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்