பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு எதிரான வழக்குகள் பரிசீலனை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு எதிரான வழக்குகள் பரிசீலனை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு எதிரான வழக்குகள் பரிசீலனை

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2021 | 6:15 pm

Colombo (News 1st) பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படும் பேரணியை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் முன்னெடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு மீள பெறப்பட்டுள்ளது.

தமக்கெதிராக விதிக்கப்பட்ட தடையுத்தரவை ஆட்சேபித்து சிலரால் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நகர்த்தல் பத்திரம் மீதான விசாரணையின் பின்னர் குறித்த தடை உத்தரவு மீள பெறப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இதனிடையே, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தை சாவகச்சேரி நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நடத்தத் தடை விதிக்கக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை சாவகச்சேரி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸாரால் தனித்தனியாக செய்யப்பட்ட குறித்த விண்ணப்பங்கள் மீதான விசாரணை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

சாவகச்சேரி நீதிமன்ற நியாயாதிக்க பிரதேசம் கொரோனா தொற்று அபாயமுள்ள பகுதியாக அடையாளப்படுத்தப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், கொரோனா தொற்று ஏற்படும் வகையில் செயற்பட மாட்டோம் என்ற உறுதிமொழியையும் சட்டத்தரணிகள் வழங்கியுள்ளனர்.

பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்து, நீதவான் J.கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.

இதேவேளை, பொலிகண்டி வரையான பேரணிக்கு தடை விதிக்குமாறு கோரி வல்வெட்டித்துறை, பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பருத்தித்துறை நீதவான் சைலவன் காயத்திரி முன்னிலையில் இந்த மூன்று மனுக்களும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

விடயங்களை ஆராய்ந்த நீதவான், கிழக்கு மாகாணத்தில் COVID-19 தொற்று அபாயமுள்ள பகுதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாலும், அதில் பல்வேறு தரப்பினரும் பங்குபற்றி வருவதாலும் COVID-19 தொற்றுக்கான அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்களை நடத்த தடை விதிப்பதாக நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்