73 ஆவது சுதந்திர தினம்: சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டம்

by Staff Writer 04-02-2021 | 8:57 PM
Colombo (News 1st) 73 ஆவது சுதந்திர தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது. நேரான சிந்தனையுடன் எதிர்காலத்தை வெற்றி கொள்வதற்காக ஒன்றிணையுமாறு அனைத்து பிரஜைகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது அழைப்பு விடுத்தார். 'சுபீட்சமான எதிர்காலம் சௌபாக்கியமான தாய் நாடு' என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. COVID -19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. பொலிஸ் மா அதிபர், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட விசேட பிரமுகர்களின் வரவேற்பு நிகழ்வு ஆரம்பத்தில் இடம்பெற்றது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் வருகையின் பின்னர், சபாநாயகரும், பிரதமரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரசன்னமாகினார். தேசியக்கொடி ஏற்றப்பட்டதன் பின்னர், பாடசாலை மாணவர்களால் தேசியகீதம் இசைக்கப்பட்டதுடன், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜனாதிபதிக்காக முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு மற்றும் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டவர்கள், அதற்கு ஒத்தாசை வழங்கிய எவரும் சட்டத்திடமிருந்து தப்பிக்க இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு. இன அல்லது மத அடிப்படையில் குடிமக்களைப் பிரிப்பதற்கான முயற்சிகளை நாம் நிராகரிக்கின்றோம். அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், ஒரே சட்டம் என்ற கொள்கையே எமது நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுவே எப்போதும் எமது நிலைப்பாடு. மக்களின் முக்கிய கவனத்தை ஈர்த்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி போன்ற குற்றங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.
என ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார கேந்திரங்களை வௌிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதில்லை என்ற கொள்கை அவ்வாறே மாற்றமின்றி முன்னெடுக்கப்படுவதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு கொண்டுவரப்படுவதைத் தடுக்க பல்வேறு திட்டங்கள் குறித்து தவறான வியாக்கியானங்களை முன்வைப்போரின் அரசியல் உள்நோக்கங்களை பெரும்பான்மையான மக்கள் அறிவுபூர்வமாக ஆராய்வார்கள் என்று தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியதைத் தொடர்ந்து அணிவகுப்பு ஆரம்பமானது. இராணுவத்தின் அனைத்து படைப் பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டனர். கடற்படை மற்றும் விமானப் படையினரின் அணி வகுப்பு அடுத்ததாக இடம்பெற்றது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானங்களும் ஹெலிகொப்டர்களும் வான்பரப்பில் தமது வல்லமையை வௌிப்படுத்தின. பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் சிவில் பாதுகாப்பு படையினரும் மரியாதை அணிவகுப்பில் இணைந்துகொண்டனர். முப்படையினரின் போர் தளபாடங்களும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டதுடன், COVID ஒழிப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பிரிவும் இம்முறை அணிவகுப்பில் இணைக்கப்பட்டிருந்தது. கலாசார நிகழ்வுகளும் சுதந்திர தின கொண்டாட்டங்களை அலங்கரித்தன.