4/21 தாக்குதலுடன் தொடர்புடையோர் சட்டத்திலிருந்து தப்ப முடியாது - ஜனாதிபதி 

by Staff Writer 04-02-2021 | 1:11 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நிறைவடைந்ததும் அதன் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத்தினால் இது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு குறித்த கண்காணிப்பு செயற்குழுவின் பரிந்துரைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். இந்த கொடூரமான குற்றத்தைத் திட்டமிட்ட, ஒத்துழைப்பு வழங்கிய, பொறுப்பானவர்கள், எவரும் சட்டத்தை எதிர்நோக்கமால் தப்பிக்க அனுமதிக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.