சுதந்திர தினமான இன்று வடக்கு, கிழக்கில் கரிநாள் அனுஷ்டிப்பு

by Staff Writer 04-02-2021 | 8:24 PM
Colombo (News 1st) நாட்டின் 73 ஆவது சுதந்திர தினமான இன்று வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு உறவினர்களால் இன்று கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, குறித்த பகுதிக்கு வருகை தந்த பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவை வாசித்து போராட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தினர். எனினும், போராட்டம் தொடர்ந்தும் வலுப்பெற்றது. இதன்போது, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதேவேளை, கடந்த 2 ஆம் திகதி முதல் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக சூழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். சுமார் ஒரு மணித்தியாலம் வரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, காக்காகடை சந்தியிலிருந்து மற்றுமொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பொலிஸார் தடையுத்தரவை அறிவித்த போதிலும் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. சுதந்திர தினமான இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம், வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் இந்த போராட்டம் வலுப்பெற்றது. இந்த போராட்டத்திற்கு வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தால் நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று உணவு தவிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை இறை இரக்க நாதர் ஆலயத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் .