யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

04 Feb, 2021 | 3:13 pm

Colombo (News 1st) நாளைய தினம் (05) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடையாள வேலைநிறுத்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஒத்துழைக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளரின் கையொப்பங்களுடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட 1000 ரூபா அடிப்படை சம்பளம் என்ற விடயத்தை இனியும் காலம் தாழ்த்தாது அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்களாயின், யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் மாணவர் ஒன்றியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமூக நீதி தொடர்பான விடயங்களில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் எனவும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி சம்பள நிர்ணய சபையில் இடம்பெறவிருக்கும் பேச்சுவார்த்தையின் போது 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு உறுதி எடுக்க வேண்டும் எனவும் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது காணப்படுகின்ற விலைவாசியின் அடிப்படையில் வாழ்வதற்கான சம்பளமானது ஆயிரம் ரூபாவை விட அதிகமாக காணப்படும் பட்சத்தில் , அதற்கான பேச்சுவார்த்தை தோல்வியை நோக்கி செல்வது இலங்கையில் சமூக நீதி தொடர்பான பாரிய இடைவௌியை அடையாளப்படுத்துவதாகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்