பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி: தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என பலரும் கோரிக்கை

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி: தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என பலரும் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

04 Feb, 2021 | 7:19 pm

Colombo (News 1st) தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன் நிறுத்தி பொத்துவிலில் நேற்று (03) ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று வெருகல் பகுதியை சென்றடைந்தது.

பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையான இந்த பேரணியின் இரண்டாம் நாள் மட்டக்களப்பு – தாழங்குடாவிலிருந்து இன்று ஆரம்பமானது.

இதன்போது, அங்கு சென்ற பொலிஸார் சிலருக்கு எதிராக தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். எனினும், பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பேரணி காத்தான்குடி நகரை சென்றடைந்ததும் பெருந்திரளானோர் இணைந்துகொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிறுபான்மை மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி இனி நடக்கக்கூடாது என வலியுறுத்தினார்.

தமிழ் பேசும் சமூகங்களாக வடக்கு, கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களும் வடக்கிலும் கிழக்கிலும் அதற்கு வௌியேயும் வாழும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் மலையகத்தில் வாழும் தமிழ் உறவுகளும் ஒன்றாக இணைந்து நிற்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

ஜனாஸாக்கள் எரிப்பு நிறுத்தப்பட்டு, அவற்றை புதைக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதுடன், தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பேரணியின் போது வலியுறுத்தினார்.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முடிவிற்கு வர ​வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்கா வழியாக தாண்டவன்வௌி சந்தியை பேரணி சென்றடைந்தது. ஏறாவூர் நகரிலும் பெருந்திரளானோர் பேரணியில் கலந்துகொண்டனர்.

சித்தாண்டியூடாக சந்திவௌியை பேரணி சென்றடைந்ததுடன், சந்திவௌி புதுப்பிள்ளையார் ஆலயத்தில் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

பின்னர் வாழைச்சேனை சந்தியிலிருந்து நகர் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது.

சிறுபான்மை சமூகம் பிரிந்திருக்காமல், இவ்வாறு சேர்ந்து செயற்படுவதை தாம் வரவேற்பதாக இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி குறிப்பிட்டார்.

வாகரையூடாக வெருகலை பேரணி சென்றடைந்து, அங்கு இன்றைய பயணம் முடிவடைந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்