வர்த்தமானிக்கு தடை கோரும் மனு மீது விசாரணை

கிழக்கு மாகாண ஆளுநர் வௌியிட்ட வர்த்தமானிக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை

by Staff Writer 03-02-2021 | 4:30 PM
Colombo (News 1st)  திருகோணமலை - தம்பலகாமம் மற்றும் அம்பாறை - இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களின் அதிகாரம் இடைநிறுத்தப்பட்டு கிழக்கு மாகாண ஆளுநரால் வௌியிடப்பட்ட வர்த்தமானிக்கு தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இரண்டு பிரதேச சபைகளின் தவிசாளர்களும் தொடர்ந்தும் கடமையாற்ற அனுமதிக்குமாறு கோரி நேற்று முன்தினம் (01) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கான முதல் விண்ணப்பத்திற்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று ஆதரவளித்துள்ளது. கிழக்கு மாகாண ஆளுநரால் தவிசாளர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு வௌியிடப்பட்ட வர்த்தமானி மீளப்பெறப்பட்டுள்ளதால், வழக்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா என இதன்போது கோரப்பட்டுள்ளது. வர்த்தமானி மீள பெறப்பட்டுள்ளமையால், பழைய தவிசாளர்கள் தொடர்ந்தும் கடமையாற்ற சட்ட ரீதியாக உரித்துடையவர்கள் என சட்டத்தரணிகள் மன்றில் கூறியுள்ளனர். அது குறித்து தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தப்படுமானால், நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து மீண்டும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான உரிமையை வழங்குமாறு மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி வரை நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஒத்திவைத்துள்ளார்.