கிளிநொச்சியில் இரண்டாவது நாளாக சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டம்

by Staff Writer 03-02-2021 | 8:33 PM
Colombo (News 1st) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் இன்று இரண்டாவது நாளாகவும் சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் முன்னெடுக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இன்று யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரும் இணைந்து கொண்டுள்ளனர். வவுனியாவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை பெற்றுள்ளனர். இந்த தடை உத்தரவு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 46 ஆவது ஜக்கிய நாடுகளின் மனித உரிமை அமர்வை இலக்காகக் கொண்டும் ஆர்ப்பாட்டம் அல்லது பாத யாத்திரை முன்னெடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்