by Staff Writer 03-02-2021 | 4:18 PM
Colombo (News 1st) திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் தொடர்பான வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இரு தரப்பிலும் கனிஷ்ட சட்டத்தரணிகள் மாத்திரம் மன்றில் ஆஜராகியிருந்ததுடன், சிரேஷ்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகவில்லை.
சர்ச்சையை ஏற்படுத்திய கோவில் விடயத்தை சாமாதானமான முறையில் தீர்ப்பதற்கு வழியுண்டா என்பது தொடர்பிலும், தொல்பொருட்கள் இல்லாத பிரதேசம் எது என கண்டுபிடித்து நீதிமன்றில் அறிக்கையிடுமாறும் கடந்த தவணை உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், கடந்த மாதம் நிலவிய தொடர் மழை காரணமாக ஆய்வுகளை மேற்கொள்ள முடியால் போனதாக அரச கனிஷ்ட சட்டத்தரணி மன்றுக்கு இன்று அறிவித்துள்ளார்.
சமாதான உடன்படிக்கையையும் கோவில் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கான வரைபடத்தையும் அடுத்த தவணை மன்றில் சமர்ப்பிக்குமாறும் இதன்போது நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, தென்னைமரவாடி திரியாய் மக்களின் காணிக்குள் தொல்பொருட்கள் காணப்படுவதாகக் கூறி நடவடிக்கை எடுத்தபோது, இடைக்கால தடை விதித்து தொல்பொருள் திணைக்களத்திற்கு விதிக்கப்பட்ட உத்தரவும் இன்று நீடிக்கப்பட்டுள்ளது.
திரியாய் பகுதியில் மக்கள் வசிப்பதற்கும் பயிர்செய்கையில் ஈடுபடுவதற்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என தொல்பொருள் திணைக்களத்திற்கு ஏற்கனவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொல்பொருள் திணைக்கள அதிகாரி காணி உரிமையாளருக்கு முன் அறிவித்தல் வழங்கி தொல்பொருட்கள் காணப்படுகின்றதா என்பதை ஆராய நிபந்தனைகளுடன் அனுமதியும் வழங்கப்பட்டது.
இந்த இரு கட்டளைகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.