1000 ரூபா நாள் சம்பளம் வழங்குவதற்கான முறைமையை தயாரித்து வருவதாக அரசாங்கம் அறிவிப்பு

1000 ரூபா நாள் சம்பளம் வழங்குவதற்கான முறைமையை தயாரித்து வருவதாக அரசாங்கம் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2021 | 5:15 pm

Colombo (News 1st) தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான முறைமையொன்றைத் தயாரித்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சில நிபந்தனைகளுக்கு தொழிற்சங்கத்தினர் இணங்கவில்லை. சில நிபந்தனைகளுக்கு முதலாளிமார் இணங்கவில்லை. இணக்கப்பாடில்லாத நிலையில், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு பலவந்தமாக உத்தரவிடுவதற்கு சட்ட ரீதியான அதிகாரம் தனக்கு இல்லை என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

கூட்டு ஒப்பந்தக் காலம் கட்டாயமாக நான்கு வருடங்களாக அமைய வேண்டும் என முதலாளிமார் கூறும் நிலையில், இரண்டரை வருடங்களாக அமைய வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கூறுகின்றனர். குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் என்பதற்கேனும் இணங்கி கைச்சாத்திடுமாறு அரசாங்கம் தரப்பில் கோரப்பட்டதாகவும் அதற்கு அவர்கள் இணங்கவில்லை எனவும் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.

ஆகவே, இது குறித்து அரசாங்கத்தையோ தன்னையோ குற்றஞ்சாட்டுவது தவறானது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஏதேனுமொரு வகையில் நாள் சம்பளம் 1000 ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதற்குத் தீர்வாக ஏதேனுமொரு வகையில் சம்பள நிர்ணய சபையின் மூலம் உத்தரவை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். நாள் சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவதற்கான முறைமையொன்றை நாம் தயாரித்து வருகின்றோம்

என நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த சம்பளமாக நிபந்தனைகளுடன் 1108 ரூபாவை பெற்றுக்கொள்ளக் கூடிய யோசனைத் திட்டத்தை பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் கையளித்தது.

எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள் இதுவரை இந்த திட்டத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளம் தெரிவித்தது.

அடிப்படை சம்பளமாக 725 ரூபாவும் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய கொடுப்பனவாக 108 ரூபாவும் உற்பத்திக்கு ஏற்ற கொடுப்பனவாக 225 ரூபாவும் விலைக்கேற்ற கொடுப்பனவாக 50 ரூபாவும் குறித்த யோசனைத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்