Nimavin Developers-இற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

வீடமைத்து தருவதாக மோசடி: Nimavin Developers-இற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 02-02-2021 | 7:41 PM
Colombo (News 1st) வீடமைத்துத் தருவதாகத் தெரிவித்து 1400-க்கு மேற்பட்டோரிடம் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட நிதியை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகத் தெரிவித்து Nimavin Developers (Pvt) Ltd மற்றும் அதன் உரிமையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜூன் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி பிரேன்க் குணவர்தன இதற்கான உத்தரவை பிறப்பித்தார். கொழும்பு வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள அந்த நிறுவனத்திற்கும் பெலவத்த குமாரகேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கும் எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே ஆஜரானார். பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி, இந்த மோசடியால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், குறுகிய காலத்திற்குள் வழக்கை விசாரணைக்கு எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் மட்டக்குளி, ஹொரணை மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி 2016 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி பணம் பெறப்பட்டதாகவும் இதுவரை அவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவோ அல்லது பணத்தை திருப்பிக் கொடுக்கவோ குறித்த நிறுவனம் முன்வரவில்லை எனவும் சட்டத்தரணி மேல் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்