மேற்கு முனையம் மூலோபாய பெறுமதியுடையது அல்ல: உதய கம்மன்பில

by Bella Dalima 02-02-2021 | 8:29 PM
Colombo (News 1st) கிழக்கு முனையத்திற்கு பதிலாக கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியா, ஜப்பான் அல்லது தனியார் முதலீட்டினால் முன்னெடுப்பதற்கு தற்போது பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. மேற்கு முனையம் மூலோபாய பெறுமதியுடையது அல்லவெனவும் அதனை இந்தியா, ஐப்பான் அல்லது தனியார் முதலீடு மூலம் அபிவிருத்தி செய்வது ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின்படியே இடம்பெறும் எனவும் இணை அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில குறிப்பிட்டார். இந்திய அரசாங்கம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்தினால் பெயரிடப்படும் நிறுவனத்துடன் கூட்டு முதலீட்டை மேற்கொள்வதற்கே அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அந்த இரண்டு நிறுவனங்களும் எவை என்பதனை இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்களே தீர்மானிக்கும் எனவும் உதய கம்மன்பில தெரிவித்தார். இதற்கு முன்னர் துறைமுக முனையத்தில் தனியார் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் போது பின்பற்றப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைய, மேற்கு முனையத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியது. முகாமைத்துவ நிறுவனத்திற்கு 85 வீதம், துறைமுக அதிகார சபைக்கு 15 வீதம் என்ற அடிப்படையிலேயே இரண்டு சந்தர்ப்பங்களில் பங்குகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. உடன்படிக்கை காலம் 35 வருடங்கள் எனும் சமமான நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்குவதற்கே அமைச்சரவை தீர்மானித்துள்ளது என உதய கம்மன்பில கூறினார். இதேவேளை, துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டத்திற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளதாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் சமய, சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
மேற்கு முனையத்தை தனியார் பிரிவுடன் இணைந்தே அபிவிருத்தி செய்வதாக கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கே மக்கள் ஆணை கிடைத்துள்ளது. எனவே, அதற்காக இந்தியா முன்வந்தாலும் பரவாயில்லை, வேறு நாடுகள் வந்தாலும் எமக்கு பிரச்சினை இல்லை. அதனை அபிவிருத்தி செய்து 35 வருடங்கள் நிர்வகிப்பார்கள். அதன் பின்னர் துறைமுக அதிகார சபைக்கு கிடைக்கும்
என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.