துறைமுக ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

by Staff Writer 02-02-2021 | 7:27 AM
Colombo (News 1st) துறைமுக தொழிற்சங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட சட்டப்படி வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு இந்த சட்டப்படி வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தநிலையில், கிழக்கு முனையத்தை 100 வீதமும் துறைமுக அதிகாரசபையின் கீழ் நடத்திச் செல்வதற்கு அமைச்சரவையினால் நேற்றிரவு (01) அங்கீகாரமளிக்கப்பட்டது. இதனையடுத்து, சட்டப்படி வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக ஶ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுத்தரகே தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, இன்று (02) காலை 10 மணி முதல் வழமை போன்று கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு துறைமுகத்தை நூறு வீதம் துறைமுகங்கள் அதிகார சபையின் பொறுப்பில் நடத்திச் செல்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் தொழிற்சங்கங்களுக்கு நேற்று உறுதியளிக்கப்பட்டது. தேசிய வளங்களை விற்பனை செய்யாதிருக்கும் கொள்கையின் கீழ் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் எந்தவொரு நாட்டிற்கும் விற்கவோ கையளிக்கப்படவோ மாட்டாதெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். கிழக்கு முனையம் வேறு தரப்பினரிடம் கையளிக்கப்பட மாட்டாது என எழுத்து மூலம் உறுதியளிக்குமாறு தொழிற்சங்கங்களால் கோரிக்கை விடுக்கப்பட்டன. எவ்வாறாயினும், தனது 50 வருட அரசியல் வாழ்க்கையில் பல தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான தீர்வினை தாம் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவை எழுத்துமூலம் வழங்கப்படவில்லை எனவும் பிரதமர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதனிடையே, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.