அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்திற்கு பாரிய எதிர்ப்பு

by Staff Writer 02-02-2021 | 6:05 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் முனையம் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படும் இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுக்கும், தமிழகத்தின் காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டம் தொடர்பில் அங்கு பாரிய எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வௌியிட்டுள்ளது. சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டுப்பள்ளியில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள துறைமுகத்தை 2012 ஆம் ஆண்டிலிருந்து L AND T நிறுவனம் இயக்கி வந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த துறைமுகத்தை அதானி குழுமம் கொள்வனவு செய்து, அதனை விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டது. இத்திட்டத்தின் மூலம் 1967 ஏக்கர் கடற்பரப்பு கைப்பற்றப்பட்டு, கடற்கரை சேற்றுப் பகுதிகளில் சுமார் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு 2000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படவுள்ளதால், கடுமையான சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். கடல் உணவுகள் அதிகம் கிடைக்கும் காட்டுப்பள்ளி பகுதியில் இந்தத் திட்டத்தினால் மீன் வளம் வெகுவாகக் குறைந்து வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என மீனவர்கள் அச்சம் வௌியிட்டுள்ளனர். துறைமுக விரிவாக்கப் பணிகள் குறித்து மக்கள் முழுமையாக அறிந்துகொள்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படவில்லை எனவும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தற்போது 330 ஏக்கராகவுள்ள துறைமுகத்தை 20 ஆண்டுகளில் 6111 ஏக்கராக விரிவுபடுத்துவதற்கு அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.