by Staff Writer 02-02-2021 | 11:04 AM
Colombo (News 1st) சோளப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக இலங்கை மகாவலி அதிகார சபையின் கீழ் காணப்படும் இறம்பகென் ஓயா வலயத்திலுள்ள 2,750 ஏக்கரை குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சோள இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், சோளப் பயிர்ச்செய்கையை பாரியளவில் மேற்கொள்வதற்காக உள்ளூர் விவசாய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், காணிகளை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறம்பகென் ஓயா வலயத்தில் அடையாளங்காணப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சொந்தமில்லாத, குறை பயன்பாட்டிலுள்ள 2,750 ஏக்கர் காணியை குறித்த முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அடையாளங்காணப்பட்ட உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு ஒரு வருட கால குத்தகை அடிப்படையில் குறித்த காணிகளை வகை பிரித்து வழங்குவதற்கும் பயிர்ச்செய்கையின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, காணிகள் கட்டளை சட்டத்தின் கீழ் நீண்ட கால குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.