கிழக்கு முனையம் தொடர்பில் ஒருதலைப்பட்சமாக இலங்கை தீர்மானிக்காது: இந்தியா நம்பிக்கை

கிழக்கு முனையம் தொடர்பில் ஒருதலைப்பட்சமாக இலங்கை தீர்மானிக்காது: இந்தியா நம்பிக்கை

எழுத்தாளர் Bella Dalima

02 Feb, 2021 | 8:17 pm

Colombo (News 1st) கிழக்கு முனையம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இதுவரை இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார்.

இந்த விடயத்துடன் மூன்று தரப்புகள் தொடர்புபட்டுள்ளதால், இலங்கை ஒருதலைப்பட்சமாக தீர்மானத்தை மேற்கொள்ளாது என இந்தியா எதிர்பார்ப்பதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 100 வீதம் துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் முன்னெடுக்கப்படும் என இலங்கை பிரதமர் நேற்று (01) அறிவித்திருந்தாலும், பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளதாக இந்தியாவிற்கு அறிவிக்கப்படவில்லை என இன்றைய த ஹிந்து பத்திரிகையில் செய்தி வௌியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று மாலை தமது நிலைப்பாட்டை வௌியிட்டது.

2019 ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட முத்தரப்பு இணக்கப்பாடு மற்றும் தற்போதைய அரசாங்கத்தினால் மூன்று மாதங்களுக்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய செயற்படும் என இந்திய அரசு எதிர்பார்ப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த உடன்படிக்கையை இரத்து செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு உதவும் நாடாக இந்தியாவைப் பார்ப்பதாகவும் அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.

எனினும், தற்போதைய நிலையை புரிந்துகொள்ளும் இயலுமை இந்தியாவிற்கு உள்ளதாகவும், தொடர்ந்தும் இந்தியா நட்புறவுடன் பயணிக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்