நாட்டில் மேலும் 7 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 7 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 01-02-2021 | 10:32 PM
Colombo (News 1st) நாட்டில் இன்றைய தினம் (01) மேலும் 7 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. வட கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வத்தளையை சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த 31ஆம் திகதி உயிரிழந்துள்ளார். COVID - 19 நியூமோனியாவுடன் ஏற்பட்ட சிறுநீரக நோய் மற்றும் குருதி விஷமடைவினால் ஏற்பட்ட அதிர்ச்சி என்பன இவரது மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர், மஹரகம அபேக்‌ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் கொவிட் நியூமோனியா மற்றும் புற்றுநோயினால் இன்று (01) உயிரிழந்துள்ளார். கொழும்பு - 02 பகுதியை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் கொவிட் நியூமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் இருதய நோயினால் நேற்று முன்தினம் கடந்த 31ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இதனிடையே, உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இருதய நோய் காரணமாக இன்று (01) உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட 39 வயதான ஆண் ஒருவர் கடந்த 30 ஆம் திகதி தனது வீட்டிலேயே மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்றுடன் குருதி விஷமடைவினால் உடல் உறுப்புக்கள் செயலிழந்தமை மற்றும் கொவிட் தொற்றால் ஏற்பட்ட சுவாச அழற்சி, நியூமோனியா மற்றும் சிறுநீரக தொற்று என்பவற்றின் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளது. மடவல பகுதியை சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (01) உயிரிழந்துள்ளார். கொரோனா நியூமோனியாவுடன் இருதயம் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, கெலிஓயா பகுதியை சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர், பேராதனை வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் கொவிட் நியூமோனியாவுடன் ஏற்பட்ட குருதி விஷமடைவு, உக்கிர நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயினால் இன்று (01) உயிரிழந்துள்ளார்.