கோறளைப்பற்றில் கவனயீர்ப்பு போராட்டம்

கிழக்கு மாகாண ஆளுநர், கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக போராட்டம்

by Staff Writer 01-02-2021 | 10:26 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் இன்று (01) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினர். கோறளைப்பற்று பிரதேச சபையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமையை நிவர்த்திப்பதற்கான விசாரணையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, கடந்த மாதம் 8ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டது. அந்த விசாரணை முடியும் வரை கோறளைப்பற்று பிரதேச சபை தலைவர் பதவியிலிருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சோபா ஜெயரஞ்சித் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில், பிரதேச சபைத் தலைவர் பதவியிலிருந்து சோபா ஜெயரஞ்சித் இடைநிறுத்தப்பட்டதை இரத்து செய்து, கடந்த மாதம் 27ஆம் திகதி மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது. இதற்கமைய, கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக சோபா ஜெயரஞ்சித் இன்று மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்று கவனயீர்ப்புப் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது உள்ளூராட்சி மன்ற சட்டத்திற்கு முரணான விடயமாக நாங்கள் இதனைக் கருதுகின்றோம். அப்படியென்றால், உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரு சட்டம் தேவையில்லை. இவர்கள் நினைத்தவாறு இதை செய்வதாக இருந்தால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சட்டமொன்று இயற்றப்பட்ட சட்டம் தேவையில்லை என்றே கூற வேண்டும்
என கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் எஸ். எம். அஸ்மி தெரிவித்தார்.
இந்த ஒட்டுக் குழுக்கள் பிள்ளையானைப் போன்றவர்கள் அதிரடியாக முடிவெடுத்து இந்தப் பிரதேச சபையை தம்வசப்படுத்தி இதிலிருக்கும் ஊழலை தொடர்ச்சியாக, அவருடைய குடும்ப சகாக்களின் ஊழல்கள் இந்த சபையிலுள்ளது. சபையின் நிதியை கையாடியாக ஆதாரங்கள் இருக்கின்றன. இவற்றை மறைப்பதற்கு இவர்கள் தொடர்ச்சியாக துணை போவது ஏன் என்ற ஐயம் எங்களுக்கு எழுகின்றது
என கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் கே. குணசேகரன் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு விடயங்களிலும் அரசியல் தலையீடு இனிமேலும் விசாரணைகள் அமைக்கப்பட்டால் நீதியாக நடக்குமா என்ற கேள்வி எங்களுக்குள் இருக்கின்றது. ஏன் என்று சொன்னால், கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் அடிக்கடி சொல்லியிருக்கின்றார் ஒன்றும் பிரச்சினையில்லை அண்ணன் ஆளுநருடன் கதைத்திருக்கின்றார், அண்ணன் எல்லா விடயங்களையும் பேசியிருக்கின்றார் என கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் கே.சேயோன் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில், பிரதேச சபையின் தவிசாளரிடம் நாம் வினவினோம். உண்மையாக அரசியல் தலையீடு என்பது இங்கு இல்லை. சட்டத்தின்படி எங்களுக்குரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சரியான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. காரணம், எங்களுடைய சபையானது பிரதேச சபைச் சட்டத்தின்படி வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து அதில் கோரத்துடன் எங்களுடைய வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்ததாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.