ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை செயற்படுமென எதிர்பார்ப்பதாக இந்தியா அறிவிப்பு 

by Staff Writer 01-02-2021 | 5:15 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் சற்று நேரத்திற்கு முன்னர் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை செயற்படுமென இந்தியா எதிர்பார்ப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வௌிப்படுத்தப்பட்டதாகவும் நாட்டின் தலைமை அது தொடர்பில் அறிவித்திருந்ததாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையின் அமைச்சரவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தீர்மானித்திருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அனைத்து தரப்பினரும் ஏற்கனவே ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரம் செயற்படவேண்டும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது அறிக்கையொன்றில்  சுட்டிக்காட்டியுள்ளது.