ஜனாதிபதியினால் விசேட ஆணைக்குழுவொன்று நியமனம் 

ஜனாதிபதியினால் விசேட ஆணைக்குழுவொன்று நியமனம் 

by Staff Writer 31-01-2021 | 3:04 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். இந்த புதிய ஆணைக்குழு அதி விசேட வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அது அரச அச்சகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர் தம்மிக்க பிரியந்த சமரகோன் ஜயவர்தனவின் தலைமையிலான இந்த ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் குமுதுனி விக்ரமசிங்க மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரத்னப்பிரிய குருசிங்க ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையிலுள்ள பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கிடைத்திருந்தது. குறித்த அறிக்கையில் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய, 3 மாதங்களுக்குள் விசாரணைகளை மேற்கொண்டு தீர்ப்புகளுக்கு அமைய வழங்க வேண்டிய தண்டனைகளை குறிப்பிட்டு இறுதி அறிக்கை அல்லது இடைக்கால அறிக்கையொன்றை தம்மிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தாம் நியமித்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். விசேட ஜனாதிபதி ஆணைக்குழு கவனத்திற்கொள்ள வேண்டிய 4 முக்கிய விடயங்கள் தொடர்பிலும் அதி விசேட வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய, வழங்கப்பட்ட சத்தியப் பிரமாணத்தை மீறுதல் மற்றும் அரசியலமைப்பின் ஏற்பாடுகளை மீறுதல் என்பன முதலாவது விடயமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் அல்லது அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தல், தலையீடு செய்தல், மோசடி செய்தல், ஊழல், குற்றவியல் துஷ்பிரயோகம், குற்றவியல் நம்பிக்கை மீறல் அல்லது உறவினர்களுக்கு சலுகை செய்தல் ஆகிய விடயங்கள் குறித்தும் இந்த ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஒருவரிடமிருந்து அரசியல் ரீதியாக பழிவாங்கப்படல் மூன்றாவது விடயமாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவருக்கு நியமனம் வழங்கப்படும்போது அல்லது நியமனம் செய்யும்போது, பதவி உயர்வு வழங்கும்போது சேவையை முடிவுறுத்தும்போது ஏதேனும் முறைகேடு, ஏதேனும் எழுத்துமூலமான சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பில் பிரதிவாதிகள் எந்தளவிற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பதை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டின் ஏழாம் இலக்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சட்டத்தின் ஒன்பதாம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய, குறித்த அறிக்கையின் பிரகாரம் யாரேனும் ஒருவரை சமூக இயலாமைக்கு உட்படுத்துவதற்கு பரிந்துரை செய்வதற்காகவும் இந்த ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.