கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதுமில்லை, குத்தகைக்கு வழங்குவதும் இல்லை - பிரதமர் 

by Staff Writer 31-01-2021 | 5:13 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எவ்விதத்திலும் வௌிநாட்டவர்களுக்கு வழங்கப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கவுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய நிலை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் குற்றச்சாட்டுவதற்குரிய தேவை யாருக்கும் கிடையாது எனவும் கிழக்கு முனையம் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே காணப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தமது தீர்மானம் குறித்து துறைமுக தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆகவே, இதற்கான பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவையிலுள்ள 95 வீதமானவர்கள், கிழக்கு முனையத்தை வௌிநாட்டவர்களுக்கு வழங்கக்கூடாது என்ற நிலைபாட்டிலேயே உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய வளங்களை விற்பனை செய்வது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை எனவும் அந்த கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு தமது அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்யவில்லை எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.