மார்ச் முதல் வாரத்தில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியும்: சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

by Bella Dalima 30-01-2021 | 6:56 PM
Colombo (News 1st)  எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் வாரத்திற்குள் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க முடியும் என இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உறுதியளித்தார். கட்டான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
இரண்டாவது தடுப்பூசியை எதிர்வரும் 4 வாரங்களுக்குள் சுகாதார தரப்பினருக்கும், முப்படையினருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். வெகுவிரைவில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மார்ச் முதல் வாரத்தில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். பக்கவிளைவுகள் ஏற்படுமாயின், அதற்காக சிகிச்சை வழங்கவும் சுகாதார தரப்பினர் தயாராகவுள்ளனர். அதன் பின்னர் ஏற்படும் நோய் அறிகுறிகள் தொடர்பாக பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கும் தயாராகவுள்ளோம்
இதேவேளை, AstraZeneca COVISHIELD தடுப்பூசி 25 மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் இன்றும் பல வைத்தியசாலைகளில் செலுத்தப்பட்டது. சுகாதார ஊழியர்கள் மற்றும் முப்படையினருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக கொரோனா ஒழிப்பு, ஆரம்ப சுகாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான தடுப்பூசிகள் பிரதேச மருந்தக களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முதல் கட்ட தடுப்பூசிகளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.